சுவையான கமகமக்கும் ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி.!

0

பருப்பு பொடி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ஆந்திரா மெஸ் பருப்பு பொடிதான். ஆந்திரா மெஸ்ஸுக்கு பலர் சாப்பிட செல்ல முக்கிய காரணம் அங்கு வழங்கப்படும் பருப்பு பொடிதான்.சூடான சாதத்தில் பருப்புப் பொடி தூவி, நெய் விட்டு பிசையும் போதே பசி பெருகும். ஆந்திரா உணவகங்களில் இந்தப் பொடி (Kandi Podi) வைக்கப்படாத மேஜையே இல்லை. இப்பொடியை ஆங்கிலத்தில் விசித்திரமாக Gun Powder என்றே அழைக்கின்றனர்!  


நான்வெஜ் பிரியர்கள்கூட வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடுகையில் பருப்பு பொடியை விருப்பி சாப்பிடுவர். அந்த அளவிற்கு ருசியான பருப்பு பொடியை வீட்டிலேயே சுலமாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

கடலெண்ணெய்/ நல்லெண்ணெய்  - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 கப்

பொட்டுக்கடலை - 1 கப்

கடலை பருப்பு – 1/4 கப்

உளுத்தம் பருப்பு - 5 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 12 -15

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு (தோலுடன்) - 12 பல்

கட்டிப் பெருங்காயம் - 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

கல்லுப்பு - சிறிதளவு


செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த கட்டி பெருங்காயத்தை போட்டு பொரித்துக் கொள்ளுங்கள். கட்டி பெருங்காயம் மேலே பொறிந்து பொங்கி வந்தவுடன் அதை தனியாக எடுத்து விடவும். (தூள் பெருங்காயமாக இருந்தால் அதை கால் ஸ்பூன் இந்த பொருட்களோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.) 


கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும். அதில் வரமிளகாய்  போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு அதையும் எடுத்து விடுங்கள்.


பிறகு பூண்டு போட்டு அதையும் மூன்று நிமிடம் அந்த எண்ணெயிலேயே வறுத்து எடுத்து விடுங்கள். 


அந்த கடாயில் இன்னும் கொஞ்சம் மீதம் எண்ணெய் ஒட்டி இருக்கும். அதில் எடுத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை போட்டுக் கொள்ளவும். துவரம் பருப்பு பொன்னிறமாக சிவந்து வருபட வேண்டும். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து வருங்கள். 


துவரம் பருப்பு வறுபட்டவுடன் இறுதியாக அதில் மிளகு, சீரகம்  பொட்டுக்கடலையையும் போட்டு,  ஒரு முறை கலந்து விட்டு இதையும் அப்படியே ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். 


இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஒரு கொத்து அந்த கடாயில் போட்டு லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.  அந்த சூட்டிலேயே கருவேப்பிலை மொறுமொறுப்பாக வந்துவிடும். 


இப்போது வறுபட்ட பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 


அரைக்கும் முறை

பருப்பு பொடி நல்ல பக்குவத்தில் கிடைக்க அதை அரைப்பதற்கு ஒரு சில முறைகள் உள்ளன. அதை பின்பற்றி அரைத்தால் பொடியின் பக்குவம் மிகவும் நன்றாகவே இருக்கும்.


முதலில் வறுத்து வைத்துள்ள மிளகாய், கல்லுப்பு, பெருங்காயத்தை கரகரவென அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டாவதாக வறுத்து வைத்த துவரம் பருப்பு, பொட்டுக் கடலை, சீரகத்தை செர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வறுத்த கறிவேப்பிலையும் பூண்டையும் சேர்த்து நன்கு அரைத்தால் சுவையான கமகமக்கும் ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி தயார்.

(இந்தப் பொடியை கொரகொரப்பாக அரைக்க கூடாது நைசாக அரைத்தால் தான் சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிட ருசி தரும்.) 


கூடுதல் குறிப்பு :

பருப்பு பொடியை அரைத்ததும் அதை ஒரு தட்டில் நன்றாக பரப்பி வைக்கவும், ஆறிய பின்னர் அதை ஒரு சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். சாப்பிடும்போது சுடு சாதத்தில் சூடான உருக்கிய நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)