முன்பெல்லாம் நம் வீடுகளில் விதவிதமான குழம்புகளுக்குத் தனித்தனி மசாலா பொடிகளைப் பயன்படுத்த மாட்டார்கள். சாம்பார், காரக்குழம்பு, மீன் குழம்பு, கறிக்குழம்பு என அத்தனையையும் ஒரே ஒரு 'ஆல்-இன்-ஒன்' மிளகாய் தூள் வைத்தே கமகமவென்று சமைத்து அசத்துவார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், சமையலை எளிமையாக்க நினைப்பவர்களுக்கும் இந்தத் தூள் ஒரு வரப்பிரசாதம். வருடம் முழுதும் வண்டு பிடிக்காமல், மணம் மாறாமல் வருஷம் முழுதும் மணக்கும்.
பாரம்பரிய கைமுறை மிளகாய் தூள் செய்முறையை இங்கே பார்ப்போம் :
| பொருட்கள் | அளவு |
| மிளகாய் வத்தல் (நீட்டு அல்லது குண்டு மிளகாய்) | 1 கிலோ |
| மல்லி விதை (தனியா) | 1 கிலோ |
| மஞ்சள் (விரலி மஞ்சள்) | 200 கிராம் |
| சீரகம் | 200 கிராம் |
| மிளகு | 100 கிராம் |
| சோம்பு | 100 கிராம் |
| பெருங்காயம் (கட்டி பெருங்காயம் சிறந்தது) | 200 கிராம் |
| கடுகு | 75 கிராம் |
| வெந்தயம் | 75 கிராம் |
| கசகசா | 75 கிராம் |
| பச்சரிசி | 100 கிராம் |
| துவரம் பருப்பு | 100 கிராம் |
| உளுந்தம் பருப்பு | 100 கிராம் |
| கடலை பருப்பு | 200 கிராம் |
| கருவேப்பிலை | ஒரு கைப்பிடி |
குறிப்பு :
ஜாதிக்காய் 1 சிறிய துண்டு (10g): குருமா மற்றும் கறிக்குழம்புகளுக்கு ஹோட்டல் ஸ்டைல் கமகமக்கும் வாசனையைக் கொடுக்கும். (குறிப்பாக, இது அசைவ உணவுகளால் ஏற்படும் செரிமானக் கோளாறுகளை நீக்கி, உடலுக்கு நல்ல சுறுசுறுப்பைத் தரும்).
காய்ந்த சுக்கு 50 கிராம் : அசைவக் குழம்புகளுக்கு (மீன், கறி) இந்தத் தூளைப் பயன்படுத்தும் போது நல்ல செரிமானத்தையும், தனித்துவமான சுவையையும் தரும்.
செய்முறை விளக்கம்
- சுத்தம் செய்தல்: முதலில் மிளகாய் வத்தல் மற்றும் மல்லி விதையில் உள்ள காம்புகள், தூசிகளை நீக்கி சுத்தப்படுத்தவும். கறிவேப்பிலையை நன்றாகக் கழுவி, ஈரம் போக நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
- வெயிலில் காயவைத்தல்: அனைத்துப் பொருட்களையும் தனித்தனி தட்டுகளில் பரப்பி, நல்ல வெயிலில் 2 முதல் 3 நாட்கள் நன்றாகக் காய வைக்க வேண்டும். (மிளகாயை உடைத்தால் 'சடக்' என்று உடைய வேண்டும், அதுதான் சரியான பதம்).
- வறுக்கும் முறை (விருப்பப்பட்டால்): அனைத்து பொருட்களையும் ( பொருட்களை வெயிலில் காய வைக்க முடியாதவர்கள்) வெறும் வாணலியில் (Dry Roast) தனித்தனியாக மிதமான தீயில் லேசான வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். ஆனால், வெயிலில் காய வைப்பதே நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க உதவும்.
- அரைத்தல்: நன்கு காய்ந்த அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, அருகில் உள்ள மாவு மில்லில் (Rice Mill) கொடுத்து நைஸாக அரைத்து வாங்கவும்.
- ஆறவைத்தல்: மில்லில் இருந்து அரைத்து வந்த தூள் சூடாக இருக்கும். அதை உடனே டப்பாவில் அடைக்கக் கூடாது. ஒரு பெரிய பேப்பரிலோ அல்லது தட்டிலோ கொட்டி நன்றாக ஆறவிட வேண்டும்.
முக்கியமான குறிப்புகள் (Smart Tips for Storage):
- கெட்டுப்போகாமல் இருக்க: தூள் நன்றாக ஆறிய பிறகு, ஈரம் இல்லாத சுத்தமான சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
- பயன்படுத்தும் முறை: தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சிறிய டப்பாவில் கொஞ்சமாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள பெரிய டப்பாவை அப்படியே மூடி வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் வாசனை மாறாது.
- பருப்பு மற்றும் அரிசியின் ரகசியம்: இதில் நாம் சேர்த்துள்ள பச்சரிசி மற்றும் பருப்புகள் குழம்பிற்கு நல்ல தடிமனான பதத்தைக் கொடுக்கும் என்பதால், சமைக்கும் போது தனியாகத் தக்காளி வெங்காயத்தை அதிகமாக அரைத்து ஊற்றத் தேவையில்லை.
முடிவுரை
அவ்வளவுதான்! அலாதி மணத்துடன் வீடே மணக்கும் ஆல்-இன்-ஒன் குழம்பு மிளகாய் தூள் தயார். இனி அவசர சமையலாக இருந்தாலும் சரி, விசேஷ சமையலாக இருந்தாலும் சரி, இந்த ஒரு தூளைப் போட்டு நிமிடத்தில் அசத்தலான குழம்புகளைச் செய்து முடிக்கலாம்.
💡 சமையல் ரகசியம்: வறுத்து அரைப்பதால் கிடைக்கும் அலாதி நன்மை! (Secret Cooking Tip)
குழம்பில் மிளகாய் தூள் நெடி அல்லது எருப்பு அடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, பச்சையாகக் காயவைத்து அரைத்த மிளகாய் தூளைக் குழம்பு கொதிக்கும் போது கடைசி நேரத்தில் சேர்த்தால், குழம்பில் ஒருவித 'பச்சை வாசனை' அல்லது 'கார நெடி' (எருப்பு) அடிக்கும். இதனால் குழம்பை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டியிருக்கும்.
ஆனால், இந்த முறையில் நாம் அனைத்துப் பொருட்களையும் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து அரைப்பதால், மிளகாய் மற்றும் மசாலாக்களின் பச்சைத் தன்மை வறுக்கும் போதே முழுமையாக நீங்கிவிடுகிறது.
இதனால், நீங்கள் அவசர சமையலின் போது அல்லது குழம்பு இறக்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு (கடைசி நேரத்தில்) இந்த மிளகாய் தூளைச் சேர்த்தாலும் கூட, குழம்பில் சற்றும் கார நெடி (எருப்பு) அடிக்காது. மாறாக, மசாலாக்கள் உடனே குழம்போடு ஒன்றிணைந்து, கமகமவென்ற நறுமணத்தையும், பக்குவமான சுவையையும் உடனடியாகக் கொடுத்துவிடும்!
குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி | அனைத்து குழம்புக்கும் |பயன்படும் மிளகாய் தூள் | வீட்டு மிளகாய் தூள் அளவுகள் | Kuzhambu milagai thool recipe in tamil | All purpose milagai thool ratio
